வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டம்
மூலைக்கரைப்பட்டி அருகே வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே பருத்திப்பாடு பஞ்சாயத்து சேர்ந்தனார்குளம் கிராமத்தில் வசித்து வரும் மக்களுக்கு நீண்ட காலமாக வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. மேலும் அங்கு மயானப்பாதை உள்ளிட்ட பொது இடங்களையும் சிலர் வேலி அமைத்து ஆக்கிரமித்தனர். இதனால் மயானத்துக்கு செல்ல பாதை இல்லாமல், வேறு தரப்பினர் வசிக்கும் தெரு வழியாக இறந்தவரின் உடலை தூக்கிச் செல்லும்போது மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். பொது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மயானத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று முன்தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமையில் அப்பகுதி மக்கள் மயானத்தில் குடியேறுவதற்காக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தெருவிலேயே அமர்ந்து சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், நாங்குநேரி தாசில்தார் இசக்கிப்பாண்டி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் வருகிற 14-ந்தேதி நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.