திடீரென கொட்டித்தீர்த்த மழை


திடீரென கொட்டித்தீர்த்த மழை
x
தினத்தந்தி 11 July 2023 12:30 AM IST (Updated: 11 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் நேற்று இரவு திடீரென மழை கொட்டித்தீர்த்தது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் நேற்று இரவு திடீரென மழை கொட்டித்தீர்த்தது.

திடீர் மழை

திருவாரூரில் கடந்த 15 நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. ஒரு மணி நேரம் இந்த மழை தொடர்ந்து பெய்தது. இதனால் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கியது. மழை விட்டதற்குப் பின்னர் தேங்கிய தண்ணீர் வடிந்தது.

15 நாட்களாக வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள் மழையை எதிர்பார்க்கவில்லை. திடீர் மழையால் பணி நிமித்தமாகவும், பொருட்கள் வாங்கி செல்வதற்காகவும் வெளியே வந்த வந்த மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

கடை வீதிகளில் நின்றிருந்தவர்கள் மழையில் நனைவதை தவிர்க்க கடைகளுக்குள் தஞ்சமடைந்தனர். குடை எடுத்து வராததால் நனைந்தபடியே பலர் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். மழை காரணமாக இரவு நேரத்தில் வழக்கமாக பரபரப்பாக காணப்படும் கடைவீதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.

பருத்தி விவசாயிகள் கவலை

கடுமையான வெயிலுக்கு இடையில் பெய்த மழை திருவாரூர் நகர பகுதியில் குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பருத்தி சாகுபடியில் இது பஞ்சு எடுக்கும் காலகட்டமாகும். இந்த நேரத்தில் பெய்துள்ள மழை, பருத்தி விவசாயிகளை கவலை அடைய வைத்துள்ளது.

திருமக்கோட்டை

திருமக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலையில் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது. மாலையில் வெயில் தணிந்து திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. தொடர்ந்து ஒரு மணி நேரம் கன மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

திடீர் மழை, வெயிலின் தாக்கத்தை தணித்து, குளிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமக்கோட்டையில் ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது கனமழை பெய்துள்ளது. தற்போது பெய்துள்ள மழை கடலை மற்றும் உளுந்து, எள் பயிருக்கு நல்லது என விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால் சில இடங்களில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

நீடாமங்கலம்- கூத்தாநல்லூர்

நீடாமங்கலம் பகுதியில் நேற்று மாலை சூறைக்காற்று வீசியது. ்அதன் பிறகு சிலநிமிடங்களில் காற்றுடன் கூடிய நல்ல மழையும் பெய்தது. இதனால் நீடாமங்கலத்தில் சாலைகளில் மழை நீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. அதன்பின், நேற்று முழுவதும் வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று மாலை கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், நாகங்குடி, பழையனூர், திருராமேஸ்வரம், லெட்சுமாங்குடி, பூந்தாழங்குடி, ஓவர்ச்சேரி, குலமாணிக்கம், ராமநாதபுரம், ஊட்டியாணி, பள்ளிவர்த்தி, பண்டுதக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது குளிர்ந்த காற்று வீசியது.

இருளில் மூழ்கிய நீடாமங்கலம்

நீடாமங்கலம் பகுதியில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழைபெய்தது. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்வயர்கள் அறுந்ததால் மின் தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். நீடாமங்கலம் பகுதியில் மின் தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. 3 மணிநேரத்திற்கு மேல் இந்த நிலை நீடித்தது. மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.


Next Story