முதுமலையில் திடீர் மழை


முதுமலையில் திடீர் மழை
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் உள்ள கார்குடி, தெப்பக்காடு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு நீங்கும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

முதுமலையில் உள்ள கார்குடி, தெப்பக்காடு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு நீங்கும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

வறட்சியால் பசுந்தீவன தட்டுப்பாடு

நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை, மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் முதுமலை வனப்பகுதியில் புற்கள் காய்ந்து வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

வழக்கமாக வறட்சியான காலங்களில் கோடை மழையும் பெய்வது வழக்கம். ஆனால் கூடலூர், முதுமலை, மசினகுடி பகுதியில் இதுவரை மழை பெய்ய வில்லை. இதனால் வனவிலங்குகள் மட்டுமின்றி பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோடை மழை எப்போது பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து தரப்பினரும் உள்ளனர். இந்தநிலையில் கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு குளிர்ந்த காற்று வீசியது.

முதுமலையில் மழை

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கார்குடி, தெப்பக்காடு பகுதியில் மட்டும் சுமார் ½ மணி நேரம் திடீரென பரவலாக மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை திரும்பியது. இதேபோல் திடீர் மழையால் மான்கள் கூட்டம் அதிகமாக தென்பட்டது.

மேலும் மழையில் நனைந்தபடி நின்றிருந்தன. இதை சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர். கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் மழை பெய்ததால் குளிர்ந்த காலநிலையை அனுபவித்தனர். நேற்று மாலை 4 மணிக்கு கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் குளிர்ந்த காலநிலை நிலவியது. தொடர்ந்து முதுமலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு நீங்கும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். ஆனால் கூடலூர், மசினகுடி பகுதியில் மழை பெய்யவில்லை.


Next Story