ரேஷன் கடை திடீர் இடமாற்றம்; அமைச்சர் வரும்போது மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு


ரேஷன் கடை திடீர் இடமாற்றம்; அமைச்சர் வரும்போது மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
x

செந்துறை அருகே ரேஷன் கடை திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து அமைச்சர் வரும்போது சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்

சாலை மறியல் முயற்சி

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்குடிக்காடு கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களுக்காக ரேஷன் கடை கட்டப்பட்டு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் விற்பனையாளர் கட்டிடம் பழுதாகிவிட்டதாக கூறி, கடையை மற்றொரு பகுதிக்கு திடீரென இடமாற்றம் செய்துவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல ரேஷன் பொருட்கள் வாங்க கடைக்கு வந்தபோது கடை பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ரேஷன் கடை முன்பு 200-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இந்த நிலையில் சிலர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இந்த வழியாக வர இருக்கிறார். அவர் வரும் போது சாலை மறியலில் ஈடுபட பொன்குடிக்காடு கிராம மக்கள் திட்டமிட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் மாவட்ட துணை பதிவாளர் அரப்பலி விரைந்து வந்து போராட்டக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கடையை இடமாற்றம் செய்யாமல் பழுது நீக்கம் செய்து இங்கேயே பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்று உத்திரவாதம் அளித்தனர். கிராம மக்கள் இங்கே இருந்து எடுத்து சென்ற ரேஷன் பொருட்களை உடனடியாக இங்கே கொண்டு வந்து வைக்க வேண்டும் என்றனர்.

அதனை தொடர்ந்து பொருட்கள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து கொண்டு வந்து வைக்கபட, அதன் பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த நிலையில் அந்த வழியாக வந்த அமைச்சர் சிவசங்கரை சிலர் நிறுத்தி புதிய ரேஷன் கடை கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் விரைவில் புதிய ரேஷன் கடை கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து சென்றார். அமைச்சர் வரும் நேரத்தில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story