சண்முகநதி கரையில் நிறுவப்பட்ட 24 அடி உயர வேல் திடீர் அகற்றம்
பழனி சண்முகநதி கரையில் நிறுவப்பட்டிருந்த 24 அடி உயர வேல் திடீரென்று அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 அடி உயர வேல்
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 29-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை (சனிக்கிழமை) தைப்பூசம் நடைபெறுகிறது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள், பழனி சண்முகநதியில் புனித நீராடிவிட்டு முருகன் கோவிலில் தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் பழனி மெய்த்தவ பொற்சபை என்ற அமைப்பு சார்பில், கடந்த 24-ந்தேதி சண்முகநதிக்கரையில் 24 அடி உயர வேல் நிறுவப்பட்டு தினமும் பூஜை செய்யப்பட்டு வந்தது. சண்முகநதிக்கு வரும் பக்தர்கள் இந்த வேலின் முன்பு நின்று வணங்கி, செல்போனில் புகைப்படம் எடுத்து சென்றனர்.
போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
இதற்கிடையே சண்முகநதி கரையில் உரிய அனுமதியின்றி வேல் வைத்ததாக கூறி திடீரென்று நேற்று பொதுப்பணித்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் வேலை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இதற்கு மெய்த்தவ பொற்சபை அமைப்பின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக கடந்த 2020-ம் ஆண்டு 24 அடி உயர வேல் வைத்து பூஜை செய்தோம். அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேல் வைத்து பூஜை செய்யவில்லை. இந்த ஆண்டு வேல் வைத்து பூஜை செய்தோம். ஆனால் அதிகாரிகள் திடீரென வேலை அகற்றினர். எனவே மீண்டும் அங்கு வேல் வைத்து பூஜை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், உரிய அனுமதி பெறாமல் வேல் வைக்கப்பட்டதால் அது அகற்றப்பட்டது என்றனர். 24 அடி உயர வேல் அகற்றப்பட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.