வாழை இலை விலை திடீர் உயர்வு
தஞ்சை மாவட்டத்தில் வாழை இலை விலை திடீரென உயர்ந்துள்ளதால் நுனி இலை ரூ.5-க்கும், ஏடு ரூ.4-க்கும் விற்பனையாகிறது.
தஞ்சாவூர்
அதே நேரத்தில் வாழை பயிர் நன்றாக விளைந்து அறுவடைக்கு வரும் நேரத்தில் சூறாவளிக்காற்று, புயல் போன்ற சீற்றங்கள் காரணமாக சாய்ந்து போனால் அது விவசாயம் செய்த விவசாயியின் வாழ்வை தாழ வைக்கும் என்பதற்காக இந்த சொல் வழக்கு சொல்லப்படுவது உண்டு.
பாரம்பரியத்தோடு தொடர்புடையது
பழங்காலத்தில் இருந்தே நமது பாரம்பரியத்தோடு நெருங்கிய தொடர்புடையது வாழை இலை. விருந்து, விழாக்கள், திருமணம், சுக-துக்க நிகழ்வுகளில் வாழை இலையில் உணவு பரிமாறப்படுகிறது. இது மரியாதையின் வெளிப்பாடாகவும், சுகாதாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. இன்றும் அனேக ஓட்டல்களில் வாழை இலையில் உணவு பரிமாறப்படுகிறது. இலையில் வைத்து கட்டி தரப்படும் உணவுகளுக்கு மவுசு அதிகம்.
கால்நடைகளுக்கு உணவாக...
நாம் வளர்க்கும் ஆடு, மாடு உள்பட கால்நடைகள் வாழை இலையை உணவாக உண்டு பசியாறும். எஞ்சியவற்றை பூமி எளிதாக மக்கச்செய்துவிடும். கால மாற்றத்தால் வாழை இலைகள் பயன்பாடு குறைந்து பிளாஸ்டிக் தட்டு, பேப்பர் இலை போன்றவற்றின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் பிளாஸ்டிக் தட்டுகளின் தீமையை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். அதனால் வாழை இலை மற்றும் வாழை மட்டையால் செய்யப்படும் தட்டுகள், கிண்ணங்களின் பயன்பாடு பெருகி வருகிறது. இவை சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கக்கூடியது.
சாகுபடி
தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னையும், வாழையும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை பகுதிகளில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் வாழை இலை மற்றும் வாழை நார் பொருட்கள் தயாரிப்பின் மூலம் ஏராளமானோர் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.தஞ்சையை சுற்றியுள்ள திருவையாறு, அம்மன்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி, மேலத்திருப்பூந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழை இலைகள் சென்னையில் உள்ள ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இப்படி அனுப்பி வைக்கப்படும் இலைகளில் 2 வகைகள் உள்ளன. நுனி இலை, ஏடு என 2 வகைகளாக ஓட்டலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
விலை உயர்வு
கடந்த சில தினங்களுக்கு முன்பு நுனி இலை ரூ.2-க்கும், ஏடு இலை ரூ.1.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வைகாசி மாத முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வருவதால் இலைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளதால் வாழை இலை விலை உயர்ந்துள்ளது. தஞ்சை மாநகர பகுதிகளில் நுனி இலை ரூ.5-க்கும், ஏடு இலை ரூ.4-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் நுனி இலை ரூ.4-க்கும், ஏடு இலை ரூ.3-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சையை அடுத்த அம்மன்பேட்டை பகுதியில் வாழை இலைகளை அறுவடை செய்து, அவற்றை நுனி இலை, ஏடு இலை என தரம்பிரித்து கட்டுகள் கட்டும் பணியில் நேற்று விவசாயிகள் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, முகூர்த்த நாள், வெயிலின் தாக்கம், காற்று ஆகியவற்றின் காரணமாக இலையின் விலை அதிகரித்துள்ளது. வெயிலுக்கு முன்பாகவே அதிகாலையில் வந்தே இலையை அறுவடை செய்து விடுவோம். வெயில் வந்துவிட்டால் வாழை இலை சுருங்க தொடங்கி விடும்.
தினமும் 2,500 இலைகள்
காற்று வேகமாக வீசுவதால் இலைகள் கிழிய வாய்ப்பு உள்ளது. இதனால் அறுவடை செய்யப்பட்ட இலைகளில் பயன்படுத்த முடியாத அளவுக்கு இலைகள் இருக்கும். அவற்றை அகற்றிவிட்டு தான் மற்ற இலைகளை தரம் பிரிப்போம்.நாங்கள் நிரந்தரமாக சென்னைக்கு இலைகளை அனுப்பி வருகிறோம். தற்போது வாழை இலையின் விலை உயர்ந்து இருக்கிறது. தினமும் 2,500 இலைகள் அனுப்பி வைக்கிறோம் என்றனர்.