சென்னையில் பஸ் தொழிலாளர்கள் திடீர் போராட்டம்


சென்னையில் பஸ் தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
x

போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நேற்று பஸ் தொழிலாளர்கள் திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். பஸ்களை ஆங்காங்கே நிறுத்தியதால் பயணிகள் அவதிப்பட்டனர்.

சென்னை,

சென்னையில் 625 வழித்தடங்களில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 3 ஆயிரத்து 233 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் மூலம் அன்றாடம் 42 ஆயிரத்து 855 நடைகள் (டிரிப்) மேற்கொள்ளப்படுகின்றன. நாள்தோறும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மாநகர பஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

சாதாரண கட்டண பஸ்களில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண சலுகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், மாநகர போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாகவும் உலக வங்கி நிதி உதவியுடன் இந்த ஆண்டு 500 மின்சார பஸ்களையும், அடுத்த ஆண்டு 500 மின்சார பஸ்களையும் வாங்குவதற்கான முயற்சியில் போக்குவரத்துத்துறை ஈடுபட்டுள்ளது.

தனியார் பங்களிப்பு

புதிதாக வாங்கப்படும் மாநகர பஸ்களை அரசு-தனியார் பங்களிப்புடன் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை போக்குவரத்துத்துறை ஆராய்ந்து வந்தது. இதற்கு தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச.வும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்பட 9 தொழிற்சங்க நிர்வாகிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சமீபத்தில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், போக்கு வரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளிடம், 'சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உலக வங்கி கருத்துரு அடிப்படையில் புதிதாக வாங்கப்படும் பஸ்களை அரசு தனியார் கூட்டாக இணைந்து பயன்படுத்தலாமா? என ஆய்வு செய்ய மட்டுமே தற்போது குழு அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. குழுவின் அறிக்கை அடிப்படையில் புதிதாக வாங்கப்படும் மின்சார பஸ்கள் அரசின் வழித்தடத்தில் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே இயங்கும். அதிக பொருட்செலவில் மின்சார பஸ்களை வாங்கி இயக்கும்போது நடைமுறைச் சிக்கல்கள் எழுவதை தவிர்க்கவே தனியார் பராமரிப்பில் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அரசு வழித்தடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படாது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.' என்று உறுதி அளித்திருந்தார்.

திடீர் போராட்டத்தால் பரபரப்பு

எனினும் தனியார் மயம் முயற்சிக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்ப்பு குரல் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் 12 போக்குவரத்து பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 400 ஊழியர்களை நியமிப்பதற்கு போக்கு வரத்து துறை நடவடிக்கை எடுத்துவிட்டதாக சென்னையில் பணியில் இருந்த மாநகர பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மத்தியில் நேற்று மாலை தகவல் வேகமாக பரவியது.

இதையடுத்து மாநகர பஸ் டிரைவர்கள் திடீரென்று ஆங்காங்கே பஸ்களை நிறுத்தினர். பயணிகளை கீழே இறக்கிவிட்டு திடீர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகினார்கள். அலுவலகம் முடிந்து வீடு திரும்ப முயன்ற ஊழியர்கள் சிரமம் அடைந்தனர்.

பஸ் நிலையத்தில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படாததால் பாரிமுனை, சென்டிரல், தியாகராயநகர், வடபழனி போன்ற பஸ் நிலையங்கள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி பரபரப்புடன் காட்சி அளித்தது. பஸ்களை இயக்குமாறு டிரைவர்கள், கண்டக்டர்களிடம் பயணிகள் சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

நிம்மதி பெருமூச்சு

வழக்கமாக தாங்கள் தாக்கப்பட்டால்தான் வழியிலேயே பஸ்களை நிறுத்தி பஸ் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். தொழிற்சங்க பிரச்சினையை பொறுத்தவரையில் முறைப்படி அறிவிப்பு கொடுத்துதான் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் முன் அறிவிப்பு இல்லாமல் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் குதித்தது தொழிற்சங்க பிரதிநிதிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் போக்குவரத்து கழக ஊழியர்களிடம் பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை உடனடியாக கைவிட்டு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதனை ஏற்று போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை மீண்டும் இயக்க தொடங்கினார்கள். மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 6.30 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


Related Tags :
Next Story