அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்


அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
x

துவரங்குறிச்சியில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இதனால், சுமார் 4 மணி நேரம் பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.

திருச்சி

துவரங்குறிச்சி, ஜூன்.22-

துவரங்குறிச்சியில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இதனால், சுமார் 4 மணி நேரம் பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.

போராட்டம்

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இங்கு இருந்து 49 பஸ்கள் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இங்கு மேலாளராக மகேந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் பணிமனை அலுவலகத்தில் இருந்த போது, டிரைவர் பாலாஜி (வயது 43) அங்கு வந்துள்ளார். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் மேலாளர் மகேந்திரனை பாலாஜி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மகேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் டிரைவர் பாலாஜி மீது துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த போக்குவரத்து தொழிலாளர்கள் துவரங்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று அதிகாலை 4 மணி அளவில் குவிந்தனர். பின்னர் அவர்கள் பணிமனை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவ-மாணவிகள் அவதி

போராட்டத்தில் டிரைவர் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், மேலாளரை வேறு இடத்திற்கு பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். இந்த போராட்டத்தின் காரணமாக துவரங்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய போராட்டம் காலை 8 மணி வரை நடந்ததால், அந்த சமயங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதன்காரணமாக காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் துவரங்குறிச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story