கடம்பூர் அருகே பெண் சாவில் திடீர் திருப்பம்:நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே அடித்து கொன்றது அம்பலம்பிரேத பரிசோதனை அறிக்கையால் சிக்கினார்
பிரேத பரிசோதனை அறிக்கையால் சிக்கினார்
கடம்பூர் அருகே பெண் சாவில் திடீர் திருப்பமாக நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே அடித்து கொன்றது அம்பலமானது. அவர் பிரேத பரிசோதனை அறிக்கையால் சிக்கினார்.
பிணமாக கிடந்தார்
ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியை அடுத்துள்ள குன்றி இந்திரா நகரை சேர்ந்தவர் அருள்ஜோசப் (வயது50). அவருடைய மனைவி லூர்தம்மாள் (45). கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.
இந்தநிலையில் லூர்தம்மாள் சம்பவத்தன்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுபற்றி அக்கம்பக்கத்தினர் கடம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லூர்தம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை
இதுகுறித்து போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வந்தது. அதில் லூர்தம்மாள் உடலில் காயம் இருந்ததும், அவர் தாக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து அவர் கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர். இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். அப்போது கணவர் அருள்ஜோசப் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை பிடித்து தீவிரமாக விசாரித்தபோது அவர் மனைவி லூர்தம்மாளை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வெளிவந்த தகவல்கள் வருமாறு:-
மது குடிக்கும் பழக்கம்
கணவன், மனைவி இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் உண்டு. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு அருள்ஜோசப்பும், லூர்தம்மாளும் மது குடித்துள்ளனர்.
அப்போது அருள்ஜோசப் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு் பேசியுள்ளதாக தெரிகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அருள்ஜோசப், லூர்தம்மாளை தாக்கியுள்ளார். இதில் அவர் காயம் அடைந்தார்.
சாவு
ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே லூர்த்தமாள் வைத்தியம் பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் அருள்ஜோசப்பும், லூர்தம்மாளும் மது குடித்துவிட்டு் தூங்கிவிட்டனர். அதன்பின்னர் நேற்று முன்தினம் காலை அருள்ஜோசப் மட்டும் எழுந்து வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தார்.
அப்போது லூர்தம்மாள் படுக்கையில் இருந்து எழுந்திருக்காமல் அசைவற்ற நிலையிலேயே கிடந்துள்ளார். அவர் தட்டி எழுப்பியும் எழும்பவில்லை. அவர் இறந்தது தெரிய வந்தது. இதனால் அருள் ஜோசப் அதிர்ச்சி அடைந்தார். மேலும் போலீசில் தான் சிக்கி விடுவோம் என்று நடந்ததை வெளியில் சொல்லாமல் மறைத்துவிட்டார்.
கைது
இந்தநிலையில்தான் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதைவைத்து தீவிர விசாரணை நடத்தி அருள் ஜோசப்பை போலீசார் பிடித்தார்கள்.
இதைத்தொடர்ந்து போலீசார் மர்மசாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து அருள்ஜோசப்பை கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மதுபோதையில் மனைவியை கணவரே அடித்துக்கொன்ற சம்பவம் கடம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.