மேலூர் அருகே மது வாங்கி குடித்தவர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: மதுவில் விஷம் கலந்து கொடுத்து தாய்மாமனை கொன்றது அம்பலம்- வாலிபர் கைது
டாஸ்மாக் மது வாங்கி குடித்தவர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. மதுவில் விஷம் கலந்து கொடுத்து தாய்மாமனை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேலூர்
டாஸ்மாக் மது வாங்கி குடித்தவர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. மதுவில் விஷம் கலந்து கொடுத்து தாய்மாமனை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மது குடித்தவர் திடீர் சாவு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டியை சேர்ந்தவர் பனையன் (வயது 55). இவர் அதே ஊரில் உள்ள பெரிய நாச்சியம்மன் கோவில் பூசாரி ஆவார். கடந்த 2-ந்தேதியன்று இவரும் அதே ஊரை சேர்ந்த கருத்தமொண்டி (43) என்பவரும் டாஸ்மாக் கடையில் வாங்கப்பட்ட மதுவை குடித்து மயங்கி விழுந்தனர். உடனே அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பனையன் பரிதாபமாக இறந்தார். கருத்தமொண்டி தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின்படி கூடுதல் துணை சூப்பிரண்டு கருப்பையா தலைமையில் மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன் உள்ளிட்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
அவர்களுக்கு மது வாங்கி கொடுத்தது யார்? என விசாரித்த போது கோவில் பூசாரியான பனையனுக்கு உப்போடைப்பட்டியை சேர்ந்த வீரணன் (35) என்பவர் மது வாங்கி கொடுத்தது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்தனர்.
கொலை செய்தது அம்பலம்
விசாரணையில், மது குடித்து இறந்த பனையனின் சகோதரி மகன்தான் வீரணன். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது தாயார் இறந்து விட்டார். இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு பனையன் வரவில்லை. பூசாரியான அவர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் வர முடியாது என கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வீரணன் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) கலந்து கொடுத்து தாய்மாமனான பனையனை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த மேலவளவு போலீசார் வீரணனை கைது செய்தனர்.