அமராவதி சர்க்கரை ஆலையில் கரும்பு இளஞ்சூடு ஏற்றும் விழா
மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வருகிற 10-ந் தேதி கொதிகலன் இளஞ்சூடு ஏற்றும் விழா நடைபெறவுள்ளது.
அரவை காலம்
மடத்துக்குளத்தையடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் அரவைக்கு தேவையான கரும்பு உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், பழனி, ஒட்டன்சத்திரம் தாலுகா விவசாயிகளிடம் பதிவு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலம் கரும்பு அரவை காலமாக உள்ளது.இந்தநிலையில் போதிய விலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கரும்பு சாகுபடிப் பரப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.இதனால் ஆலையை முழுமையான அளவில் இயக்கி சர்க்கரை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
இளஞ்சூடு ஏற்றும் விழா
நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவை விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான கொதிகலன் இளஞ்சூடு ஏற்றும் விழா வருகிற 10-ந்தேதி நடைபெறவுள்ளது.ஆலையின் மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன் தலைமையில் நிர்வாகக் குழு தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள், கரும்பு பயிரிடுவோர் சங்கத் தலைவர் மற்றும் பிரதிநிதிகள், ஆலையின் தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் முன்னிலையில் விழா நடைபெறவுள்ளது. மேலும் சமுதாய நலக்கூடத்தில் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. நடப்பு ஆண்டில் ஆலை தடையில்லாமல் முழுமையாக இயங்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவர் பாலதண்டபாணி கூறுகையில் "நடப்பு ஆண்டில் அரவைக்கு 2 ஆயிரத்து 600 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலையின் பிழிதிறன் அடிப்படையில் தினசரி 1250 டன் அரவை என்று கணக்கிட்டால் 3 முதல் 3½ மாதங்களே அரவை இருக்கும். ஆலையில் முழுமையாக பராமரிப்பு மேற்கொள்ள ரூ.30 கோடி வரை தேவைப்படுகிறது. எனவே போதிய பராமரிப்பில்லாத நிலையில் இயக்கப்படும் சூழலில் தடையின்றி முழுமையாக இயங்குமா? என்பது தெரியவில்லை" என்றார்.