குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அரவை தொடக்கம்


குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அரவை தொடக்கம்
x

தஞ்சையை அடுத்த குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு கரும்பு அரவை பருவம் நேற்று தொடங்கியது. அரவைக்கு 6,525 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 2 லட்சத்து 10 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சாவூர்

தஞ்சையை அடுத்த குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு கரும்பு அரவை பருவம் நேற்று தொடங்கியது. அரவைக்கு 6,525 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 2 லட்சத்து 10 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை

தஞ்சை அருகே குருங்குளத்தில் அரசுக்கு சொந்தமான அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு தஞ்சை, ஒரத்தநாடு, வல்லம், கந்தர்வக்கோட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்பு அரவைக்கு கொண்டு வரப்படும். இந்த ஆலையில் கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் மாதத்தில் அரவைப்பருவம் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் விவசாயிகள் முன்கூட்டியே அரவை பருவத்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியதன் பேரில் நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்திலேயே அரவைப்பருவம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நேற்று அரவை தொடங்கியது.

நடப்பு ஆண்டான 2022- 23-ம் ஆண்டிற்கான கரும்பு அரவையை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி செந்தில்குமாரி வரவேற்றார்.

6,525 ஏக்கர் கரும்பு பதிவு

இதில் கரும்பு பெருக்கு அலுவலர் ராமு, நிர்வாக அலுவலர் சிவா, தலைமை கணக்கர் உலகநாதன், துணை தலைமை பொறியாளர் நாராயணன், துணை தலைமை ரசாயன அலுவலர் மாதவன், கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர்கள் திருப்பதி, கோவிந்தராஜன், பொருளாளர் பொன்.ராஜ்குமார், அண்ணாதுரை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நடப்பு ஆண்டு கரும்பு அரவைக்கு 6 ஆயிரத்து 525 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டு இதன் மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டு அரவைப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக பயிரிட வேண்டுகோள்

மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பருநாற்று, பரு கரணை மற்றும் விதை கரும்பு நடவு செய்த விவசாயிகளுக்கு முதல் கட்டமாக ரூ.8.33 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வரை அரவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கரும்பு டன்னுக்கு விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 812 வழங்கப்படுகிறது. தினமும் 2,500 டன் கரும்பு அரவை செய்யப்படுகிறது.

நடப்பு பருவத்தில் கலைஞர் அண்ணா கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டங்கள் மூலமாக தொடர்ந்து கரும்பு நடவுக்கான மானியங்கள் வழங்கப்பட்ட நிலையில் அனைத்து கரும்பு விவசாயிகளும் கூடுதல் பரப்பளவில் கரும்பு பயிர் செய்து பயன்பெறுமாறு சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி செந்தில்குமாரி கேட்டுக்கொண்டார்.


Next Story