பொங்கல் பரிசில் கரும்பு இடம்பெறாததால் விவசாயிகள் ஏமாற்றம்பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக கவலை


பொங்கல் பரிசில் கரும்பு இடம்பெறாததால் விவசாயிகள் ஏமாற்றம்பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக கவலை
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பரிசில் கரும்பு இடம்பெறாததால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக அவர்கள் கவலையில் உள்ளனர்.

விழுப்புரம்


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில் முக்கிய இடம்பிடிப்பது கரும்பு. இதற்கென ஆண்டுதோறும் பன்னீர் கரும்புகளை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக விழுப்புரம் அருகே பிடாகம், குச்சிப்பாளையம், நத்தமேடு, மரகதபுரம், அத்தியூர்திருக்கை, வேலியம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் இந்த ஆண்டு சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் கரும்புகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

சர்க்கரை ஆலைகளுக்கு பயன்படுத்தப்படும் வெள்ளை கரும்புகளுக்கு அந்தந்த ஆலையின் உரிமையாளர்களே விவசாயிகளுக்கு கடன் வழங்கி அவர்களே கரும்புகளை வெட்டி எடுத்து ஆலைக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் இதுபோன்ற பன்னீர் கரும்புகளுக்கு விவசாயிகளே முதலீடு செய்து சாகுபடி செய்து வருகிறார்கள்.

நல்ல விளைச்சல்

தை மாதத்திற்கு முன்னதாக அறுவடை செய்யப்படும் பன்னீர் கரும்புகள் ஏப்ரல் மாதத்தில் நடவு செய்யப்படும். 8 முதல் 9 மாதங்கள் வரை மகசூலுக்கு தயாராகும் இந்த கரும்புகளுக்கு அதிகளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. இதனை பயிர் செய்ய பெரும்பாலும் பருவமழையை நம்பாமல் மின் மோட்டார் மூலமே தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கரும்புகள் நன்கு செழித்து வளர்ந்து விளைச்சல் ஆகியுள்ளது. அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் இந்த கரும்புகளை பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு முன்பாக விவசாயிகள் அறுவடை செய்வார்கள்.கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு ஆட்கள் கூலி, வெட்டுக்கூலி, போக்குவரத்து செலவு, உரச்செலவு ஆகிய அனைத்துமே கூடியுள்ளதால் விலையை அதிகரித்து விற்பனை செய்தால் மட்டுமே கட்டுப்படியாகும் என்று விவசாயிகள் முடிவு செய்திருந்தனர்.

அதிகளவில் சாகுபடி

மேலும் கடந்த சில ஆண்டுகளாக அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து கரும்புகளும் வழங்கப்பட்டு வந்ததால் இந்த ஆண்டும் அதேபோல் கரும்புகளை அரசு சார்பில் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கக்கூடும் என்று கருதி விவசாயிகள் வழக்கத்திற்கும் மாறாக அதிகளவில் கரும்புகளை சாகுபடி செய்தனர். ஏனெனில் கடந்த ஆண்டு ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்பட்டபோதிலும் விழுப்புரம் மாவட்டத்தின் பல இடங்களில் கரும்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம், வெளிமாவட்டங்களில் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தது.

இதனை கருத்தில் கொண்டும், கரும்புகளுக்கு எந்தவிதத்திலும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு ஒவ்வொரு விவசாயியும் அதிகளவில் கரும்பு சாகுபடி செய்தனர். கடந்த முறை 2 ஏக்கர் சாகுபடி செய்த விவசாயிகள் பலரும் இந்த முறை 3 ஏக்கர், 4 ஏக்கர் அளவில் சாகுபடி செய்தனர். விவசாயிகள் எதிர்பார்த்தபடி பருவமழையும் கைகொடுத்ததால் கரும்புகள் நன்கு திடமாக செழித்து வளர்ந்துள்ளது. வழக்கம்போல் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்புகளையும் சேர்த்து அரசு வழங்கும், இதன் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

அரசின் அறிவிப்பால் ஏமாற்றம்

இதனிடையே ஒட்டுமொத்த கரும்பு விவசாயிகளின் தலையிலும் இடி விழுந்தாற்போல் அரசின் அறிவிப்பு அமைந்தது. பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏதும் இடம்பெறவில்லை. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு பெருத்த ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பினால், அதிக முதலீடு செய்து சாகுபடி செய்த கரும்புகளை எவ்வாறு அறுவடை செய்யப்போகிறோம், லாபம் கிடைக்காவிட்டாலும் முதலீடு செய்த தொகையாவது முழுமையாக கிடைக்குமா, வங்கிகளில் பெற்ற கடனை எப்படி திரும்ப அடைக்கப்போகிறோம் என்று கரும்பு விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

விவசாயிகள் புலம்பல்

இதுகுறித்து பிடாகத்தை சேர்ந்த விவசாயி முருகன் கூறியதாவது:-

பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து வழங்க கரும்புகளை அரசே கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு அதிகளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளோம்.

தற்போது பொங்கல் பரிசுக்கான அரசின் அறிவிப்பில் கரும்பு இடம்பெறாதது எங்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. நாங்கள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1½ லட்சம் வரை செலவு செய்துள்ளோம். உர விலை, ஆட்கூலி எவ்வளவு அதிகம் என்பது அரசுக்கே தெரியும்.

கூலி ஆட்களும் சரிவர கிடைப்பதில்லை. இவ்வளவு சிரமத்துக்கு மத்தியில் வங்கிகளில் கடன் பெற்று கரும்பு சாகுபடி செய்துள்ளோம். தற்போது அவை செழித்து வளர்ந்து அறுவடைக்கெல்லாம் தயாராக இருக்கிற நிலையில் அரசின் இந்த அறிவிப்பால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பை வழங்கி வந்ததால் அரசை நம்பி அதிகளவில் பயிர் செய்துள்ளோம்.

முன்கூட்டியே இந்த ஆண்டு பொங்கல் பரிசில் கரும்பு வழங்குவதில்லை என்று அறிவித்திருந்தால் அதற்கு தகுந்தாற்போல் குறைந்தளவில் சாகுபடி செய்திருப்போம். இவ்வாறு அதிகம் பயிர் செய்து அறுவடை செய்யப்படும் சமயத்தில் பொங்கல் பரிசில் கரும்புக்கான அறிவிப்பு இல்லாததால் ஒவ்வொரு விவசாயிக்கும் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படும். வெள்ளை கரும்புகள் என்றாலாவது அதனை வெட்டி சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பலாம். இந்த வகை கரும்புகளை சர்க்கரை ஆலைகளுக்கும் அனுப்ப முடியாத நிலை உள்ளது என்றார்.

வாழ்வாதாரம் பாதிக்கும்

குச்சிப்பாளையத்தை சேர்ந்த விவசாயி மனோகரன்:-

பொங்கல் பரிசு அறிவிப்பில் கரும்பை சேர்க்காதது எங்களைப்போன்ற கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியான செய்தியாகும். எங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு அரசே, கரும்புகளை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

இல்லையெனில் ஒவ்வொரு கரும்பு விவசாயிக்கும் இந்த பொங்கல் தித்திப்பான பொங்கலாக அமையாமல் கசப்பான பொங்கலாகவே அமையக்கூடும். வியாபாரிகள் எங்களிடம் வந்து மிகவும் குறைவாக அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்ய நேரிடும்.

இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும்.இன்னும் பொங்கல் திருநாளுக்கு 3 வாரங்கள் உள்ளது. ஆகவே அரசு, கரும்பு விவசாயிகளின் நலனை கருதி, பொங்கல் பரிசுடன் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என அறிவிக்க வேண்டும். இல்லையெனில் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றார்.


Next Story