கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்
கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்
சேவூர்,
கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சேவூரில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாடு
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சேவூர் அருகே போத்தம்பாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க 8-வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. ஒன்றிய தலைவர் முத்துரத்தினம் தலைமை தாங்கினார். புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி வார்டு உறுப்பினர் குமாரசாமி வரவேற்றார். இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் துணைத்தலைவர் கொளந்தசாமி தொடக்க உரையாற்றினார். மாநாட்டு தீர்மானங்களை ஒன்றிய துணைத்தலைவர் பழனிச்சாமி முன்மொழிந்தார். ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடசலம் இயக்க வேலை அறிக்கையை முன் வைத்தார். இதனைத் தொடர்ந்து ஒன்றிய தலைவராக முத்துரத்தினம், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், ஒன்றிய பொருளாளராக குமாரசாமி உள்பட 21 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மதுசூதனன் நிறைவுறையாற்றினார்.
மாநாட்டில் விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு விவசாய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் விலை உத்தரவாதம் வழங்க வேண்டும். தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்படுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். தென்னை வளர்ச்சி வாரிய மண்டலம் அலுவலகம் சென்னைக்கு மாற்றியதை கோவையிலேயே மீண்டும் அமைத்திட வேண்டும்.
கரும்பு
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு எடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். உயர் மின் அழுத்த கோபுரங்களை அமைத்தால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மான் மற்றும் மயில்களால் ஏற்படும் பயிர் இழப்பீடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை தாலுகா பகுதியில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டன.
-----------