கள்ளக்குறிச்சி அருகே கரும்பு தொழில்நுட்ப கருத்து பரிமாற்ற கூட்டம்
கள்ளக்குறிச்சி அருகே கரும்பு தொழில்நுட்ப கருத்து பரிமாற்ற கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் கரும்பு தொழில்நுட்ப கருத்து பரிமாற்ற கூட்டம் கள்ளக்குறிச்சி அருகே விளம்பார் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி துரைசாமி முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி தெற்கு கோட்ட கரும்பு அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார். ஆலையின் மேலாண்மை இயக்குனர் முருகேசன் தலைமை தாங்கி பேசுகையில், தற்போது ஆலை ரூ.27 கோடி லாபத்தில் இயங்குகிறது. சர்க்கரை கட்டுமானம் உயர சுத்தமான கரும்பை அறுவடை செய்து ஆலைக்கு அனுப்ப வேண்டும். ஆலையில் கடந்த 3 ஆண்டுகளாக அங்கத்தினர் சேர்க்கை இல்லாத நிலையில் தற்போது புதிய கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு பங்குகள் வழங்கி அங்கத்தினராக சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிய கரும்பு நடவில் பருசீவல் நாற்று நடவு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரமும், ஒரு பரு கரணை நடவு ஏக்கருக்கு ரூ.1500-ம் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டங்கள் மூலமாக மானியம் வழங்கப்படுகிறது என்றார். மேலும் கரும்பு நடவு மற்றும் கரும்பு அபிவிருத்தி பணிகள் குறித்து கரும்பு பெருக்கு அலுவலர் செந்தில்குமார் பேசினார். இதில் கரும்பு பெருக்கு உதவியாளர்கள் துரைசாமி, ராஜேந்திரன், வெங்கடேசன், தங்கராசு மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் கள்ளக்குறிச்சி தெற்கு கோட்ட கரும்பு பெருக்கு உதவியாளர் கர்ணபூபதி நன்றி கூறினார்.