பொங்கல் கரும்புகள் சாய்ந்தன
தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக சம்பா இளம்பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதுடன் பொங்கல் கரும்பு சாய்ந்துள்ளது.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக சம்பா இளம்பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதுடன் பொங்கல் கரும்பு சாய்ந்துள்ளது.
தொடர் மழை
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி 3 லட்சத்து 15 ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.தற்போது பெய்து வரும் மழையானது 30 நாட்களை கடந்த சம்பா, தாளடி பயிர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் நடவு செய்யப்பட்டு 20 நாட்களுக்குள் உள்ள நெற்பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தஞ்சையை அடுத்த 8-ம் கரம்பை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், மேல களக்குடி மற்றும் புனவாசல், விளாங்குடி, வைத்தியநாதன்பேட்டை, கஸ்தூரிபாய் நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சம்பா நடவு செய்த சம்பா இளம்பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
உரிய நிவாரணம்
வடிகால்கள் முறையாக சீரமைக்கப்படாததால் மழை தண்ணீர் தேங்கி இருப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சில இடங்களில் விவசாயிகளே பொக்லின் எந்திரங்களை கொண்டு வந்து வடிகாலை சீரமைத்து வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ள சம்பா நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 1,400 ஏக்கரில் நெற்பயிர்களை தண்ணீர் சூழ்ந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.நேற்று மழை பெய்யவில்லை. வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடியத் தொடங்கி உள்ளது. வயல்களில் தேங்கியிருக்கும் தண்ணீர் வடிந்தால் மட்டுமே நெற்பயிர்களின் பாதிப்பு குறித்து முழுமையாக அறிய முடியும் என வேளாண்மைத்துறையினர் தெரிவித்தனர். தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கும் இடங்களில் வடிகால் வசதிகளை முறையாக தூர்வார வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பொங்கல் கரும்பு சாய்ந்தது
மேலும், இந்த மழையின் காரணமாக தஞ்சை மாவட்டம் பாச்சூர் அருகே அய்யம்பட்டியில் அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரம் எண்ணிக்கையிலான சுமார் 2 ஏக்கர் பொங்கல் கரும்புகள் வேருடன் கீழே சாய்ந்துள்ளது. இதே போல் சூரக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, அணைக்கரை போன்ற இடங்களிலும் பொங்கல் கரும்புகள் அதிக மழையின் காரணமாக கீழே சாய்ந்துள்ளது. சாய்ந்த பொங்கல் கரும்புகளை விவசாயிகள் நிமிர்த்தி ஒன்று சேர்த்து கட்டி வருகின்றர்.