ராசிபுரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ராசிபுரத்தில் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராசிபுரம்:
கல்லூரி மாணவி
ராசிபுரம் டவுன் அண்ணா சாலையை சேர்ந்தவர் பேபி ராணி (வயது 47). இவருடைய கணவர் பூபதி. இந்த தம்பதியின் மகள் ரீனு (17). இவர் ராசிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார். பூபதி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
தந்தை இறந்ததால் கல்லூரி மாணவி ரீனு மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று பேபி ராணிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். இதனால் ரீனு மட்டும் வீட்டில் இருந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு பேபி ராணி வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் கதவை தட்டியபோது, திறக்கப்படவில்லை.
தற்கொலை
இதனால் சந்தேகம் அடைந்த பேபி ராணி ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது ரீனு படுக்கை அறையில் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பேபி ராணி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரீனுவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரீனு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தந்தை இறந்த துக்கத்தில் ரீனு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.