குமாரபாளையத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை


குமாரபாளையத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
x

குமாரபாளையத்தில் மது குடிப்பதை தாய் கண்டித்ததால், மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

குமாரபாளையம்:

விசைத்தறி தொழிலாளி

குமாரபாளையம் சத்யாபுரி வீதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி பொனம்மாள். இந்த தம்பதிக்கு 4 மகன்கள், ஒரு மகள் இருந்தனர். இதில் 3-வது மகன் நந்தகுமார் (வயது 45) விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நந்தகுமாரை தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். நந்தகுமார் தனது தாய் பொன்னம்மாளுடன் வசித்து வந்தார். பொன்னம்மாளுக்கு சற்று பார்வை குறைபாடு உள்ளதாக தெரிகிறது.

நந்தகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை பொன்னம்மாள் கண்டித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நந்தகுமாரை, மது குடிக்க கூடாது என்று கூறி பொன்னம்மாள் கண்டித்துள்ளார். இதனால் வேதனையடைந்த நந்தகுமார் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.

தற்கொலை

அவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த பொன்னம்மாள் மகன் மதுபோதையில் கிடப்பதாக எண்ணி, அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் நந்தகுமாரை மீட்டு சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை நந்தகுமார் பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story