தளி, சூளகிரி பகுதிகளில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை
தளி, சூளகிரி பகுதிகளில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி, சூளகிரி பகுதிகளில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சூடம்மா (வயது 34). இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். கடன் வாங்கியவர்கள் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இது தனது கணவருக்கு தெரிந்தால் தகராறு ஏற்படும் என பயந்து சூடம்மா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவி
தளி அருகே உள்ள கம்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகள் ஹர்சிதா (14). கும்ளாபுரம் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் மாணவி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
சூளகிரி
சூளகிரி அருகே செம்பரசனப்பள்ளி பக்கமுள்ள கட்டிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சுகன்யா (25). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுகன்யா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் கோவிலுக்கு செல்வதாக கூறி சென்ற அவர், அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணம் ஆகி 4 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.