தர்மபுரியில் சோகம் ரெயில் முன் பாய்ந்து தாய்-மகள் தற்கொலை ரெயில்வே போலீசார் விசாரணை


தர்மபுரியில் ரெயில் முன் பாய்ந்து தாய்-மகள் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் ரெயில் முன் பாய்ந்து தாய்-மகள் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாய்-மகள்

தர்மபுரி செந்தில் நகர் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று மதியம் 2 பெண்கள் அந்த வழியாக வந்த ரெயில் மோதி உடல் சிதறி பலியானார்கள். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பெண்களின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கும்ளாபுரத்தை சேர்ந்த ராதாம்மா (வயது 60), சுமித்ரா (32) என தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் தாய்-மகள் என்பது விசாரணையில் உறுதியானது.

மாணவி தற்கொலை

இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன், இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

சுமித்ராவின் கணவர் நரசிம்மன். தொழிலாளி. இவர்களது மகள் ஹர்பிதா (14). கும்ளாபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த இவர் தொடர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 10-ந்தேதி ஹர்பிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மனவேதனையில் விபரீதம்

இதுதொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தர்மபுரிக்கு வந்த சுமித்ரா, தனது மகள் இறந்த சோகத்தில் இருந்துள்ளார். இதைப்பார்த்து ராதம்மாவும் மனவேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

அதன்பின்னரும் தர்மபுரியில் இருந்த ராதாம்மா, சுமித்ரா ஆகியோர் ேசாகத்தில் இருந்துள்ளனர். மனவேதனையை தாங்க முடியாத அவர்கள் தர்மபுரி செந்தில் நகர் பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தாய்-மகள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தர்மபுரி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story