நாமகிரிப்பேட்டை அருகே வடமாநில தொழிலாளி தற்கொலை
வடமாநில தொழிலாளி தற்கொலை குறித்து குடும்ப பிரச்சினையால் இறந்தாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராசிபுரம்:
நாமகிரிப்பேட்டை அருகே மெட்டாலாவில் தனியாருக்கு சொந்தமான மரவள்ளிக்கிழங்கு மாவு மில் உள்ளது. இந்த மில்லில் உத்தரபிரதேச மாநிலம் முஸ்தபாத் அருகில் உள்ள முசாத்பூர் பகுதியை சேர்ந்த பரோனி என்பவரின் மகன் சுக்பீர் (வயது 22) தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 3 மா தங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தார். நேற்று முன்தினம் சுக்பீர் பணி முடிவதற்கு முன்பாகவே தனது அறைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அங்கு அவர் திடீரென தூக்கில் தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுக்பீர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆயில்பட்டி போலீசார் விரைந்து சென்று சுக்பீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வடமாநில தொழிலாளி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, அவர் குடும்ப பிரச்சினையால் இறந்தாரா? என விசாரித்து வருகின்றனர்.