காவேரிப்பட்டணம் அருகே கந்துவட்டி தொல்லையால் டிரைவர் தற்கொலை உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
காவேரிப்பட்டணம் அருகே கந்துவட்டி தொல்லையால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே கந்துவட்டி தொல்லையால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மிரட்டல்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மலையாண்டஅள்ளி அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30) டிராக்டர் டிரைவர். ராமாபுரத்தை சேர்ந்தவர்கள் ராஜேஷ், சிவக்குமார். சகோதரர்களான இவர்கள் பைனான்ஸ் நடத்தி வருகின்றனர். இவர்களிடம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆனந்த் ரூ.1 லட்சம் கடன் வாங்கினாராம்.
இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்வரை வாங்கிய கடனுக்கு ரூ.1.60 லட்சம் வட்டியுடன் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் மேலும் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் தான் கடன் முடியும் எனக்கூறி ராஜேசும், சிவக்குமாரும் ஆனந்தை மிரட்டியுள்ளனர். பின்னர் 2 மாதங்களுக்கு முன் அவரது இருசக்கர வாகனத்தையும் பறித்து வைத்துள்ளனர். அவரது டிராக்டரையும் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் ஆனந்தை அடித்து உதைத்து தாக்கியாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
அதேபோல் விநாயகபுரம் கன்னிநகரை சேர்ந்த தமிழரசன் என்பவரிடம் ஆனந்த் சீட்டு போட்டுள்ளார். சீட்டுப்பணத்தை தமிழரசன், ஆனந்துக்கு கொடுக்காத நிலையில் மாதச்சீட்டு பணத்தை முதலில் கட்டு எனக்கூறி ஆனந்தை மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ஆனந்த் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனந்தின் சாவுக்கு காரணமான பைனான்ஸ், சீட்டு நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தாமதப்படுத்துவதாக கூறி அவருடைய உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 2 மணியளவில் காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரி முன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.