விபத்தில் மனைவி இறந்த 20-வது நாளில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
விபத்தில் மனைவி இறந்த 20-வது நாளில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஓமலூர்:
ஓமலூரை அடுத்த கோட்டப்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சிவகாமி (38). இவர் கடந்த மாதம் 26-ந் தேதி மேச்சேரி பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நண்பர் ஒருவருடன் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
ஓமலூர் பஸ் நிலையம் அருகே வந்தபோது, எதிரே வந்த மற்றொரு மொபட் சிவகாமி சென்ற மொபட் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரி ஏறியது. இந்த விபத்தில் சிவகாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் மனைவி இறந்ததால் தொழிலாளி சிவகுமார் மனவேதனையில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவகுமார் பலியானார். இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் வடிவேலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் மனைவி இறந்த 20-வது நாளில், மனவேதனையில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.