ஓசூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் லாரி டிரைவர் உள்பட 4 பேர் தற்கொலை
ஓசூர்:
ஓசூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
லாரி டிரைவர்
ஓசூரில், தளி சாலை அப்பாவு நகரை சேர்ந்தவர் அஜய் (வயது 22). லாரி டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் மனைவியுடன் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் மனமுடைந்த அஜய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் பெத்தஎலசகிரி காலனி தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவருடைய மனைவி லட்சுமி தேவி (22). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த லட்சுமி தேவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.
காதல் தோல்வி
பாகலூர் அருகே உள்ள பெலத்தூர் ஆதி திராவிடர் காலனியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (21). தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதுகுறித்து பெற்றோர் கேட்டனர். இதனால் மனமுடைந்த மஞ்சுநாத் கடந்த 22-ந் தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி அருகே உள்ள எர்ரண்டப்பள்ளியை சேர்ந்தவர் கோதண்டன் (23). கூலித் தொழிலாளி. இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் இவரது காதலை அந்த பெண் ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோதண்டன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.