மது குடிக்க மனைவி பணம் தராததால் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே மதுகுடிக்க மனைவி பணம் தராததால் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கார் டிரைவர்
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பஞ்ஜேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 33). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நளினா என்ற மனைவி உள்ளார். சந்திரசேகருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் அவருக்கும், நளினாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் சந்திரசேகர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் மீண்டும் மது குடிக்க மனைவி நளினாவிடம் பணம் கேட்டார். அதற்கு நளினா பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
தற்கொலை
இதில் விரக்தி அடைந்த சந்திரசேகர் வீட்டில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேன்கனிக்கோட்டை போலீசார் சந்திரசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.