மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
திண்டுக்கல்லில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல்லை அடுத்த குளத்தூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 31). இவர், பழைய கரூர் ரோட்டில், ஓடைப்பட்டி பிரிவு பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மணிமேகலை என்ற மனைவியும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். மணிமேகலை, தஞ்சாவூரில் போலீசாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மணிமேகலை, சுரேஷ்குமாரை விட்டு பிரிந்து தஞ்சாவூரில் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இதற்கிடையே மனைவி பிரிந்து சென்றதால் சுரேஷ்குமார் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, சுரேஷ்குமார் நேற்று வேலை முடிந்து இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு செல்லவில்லை. இதற்கிடையே அவரது உறவினர் ஒருவர் இன்று காலை ஸ்டிக்கர் கடைக்கு சென்றார். அப்போது கடைக்குள் விஷம் குடித்த நிலையில் சுரேஷ்குமார் மயங்கி கிடந்தார்.
இதையடுத்து அவரது உறவினர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுரேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சுரேஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.