திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை-உதவி கலெக்டர் விசாரணை
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
இளம்பெண்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா குள்ளம்பட்டி புதூரை சேர்ந்தவர் குமரன். கட்டிட தொழிலாளி. இவருடைய மகள் பவித்ரா (வயது 21). இவருக்கும், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சப்பாணிப்பட்டியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சுதாகர் (25) என்பவருக்கும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு சஸ்வின் (1) என்ற மகன் உள்ளான்.
இந்தநிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சுதாகருக்கும், பவித்ராவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த பவித்ராவின் தந்தை குமரன் மற்றும் குடும்பத்தினர் சப்பாணிப்பட்டியில் உள்ள பவித்ராவின் வீட்டிற்கு சென்று அவரையும், அவரது கணவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து வைத்தனர். மேலும் இருவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று புத்திமதி கூறி விட்டு சென்றனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுதாகர் மெக்கானிக் கடைக்கு சென்று விட்டார். கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் மன வேதனையில் இருந்த பவித்ரா அன்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பவித்ராவின் வீடு உள் பக்கமாக பூட்டி இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் கதவை தட்டினார்கள். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர்கள் இதுகுறித்து சுதாகர் மற்றும் காவேரிப்பட்டணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உதவி கலெக்டர் விசாரணை
அதன்பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டில் பவித்ரா தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பவித்ராவின் தந்தை குமரன் கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 2 ஆண்டுகளாகவே ஆவதால் தற்கொலை குறித்து கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமாரும், துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) அமலா அட்வினும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.