குழந்தை இல்லை எனக்கூறி கணவர் வீட்டார் கொடுமை: திருமணமான ஒரே ஆண்டில் இளம்பெண் தற்கொலை-உதவி கலெக்டர் விசாரணை
பாலக்கோடு:
திருமணமான ஒரே ஆண்டில் குழந்தை இல்லை எனக்கூறி கணவர் வீட்டார் கொடுமை படுத்தியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண்
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள சீங்கேரி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 26). லாரி டிரைவர். இவருக்கும், சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கே.என்.புதூரை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சவுந்தர்யா (23) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் குழந்தை இல்லை என்று கூறி கோபாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் சவுந்தர்யாவை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு கோபாலகிருஷ்ணனும் உடந்தையாக செயல்பட்டதால், சவுந்தர்யா மனவேதனை அடைந்தார்.
வீட்டை விட்டு ஓடினார்
கடந்த மாதம் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர்யா வீட்டை விட்டு ஓடி விட்டார். அவரை ராஜேந்திரன் கண்டுபிடித்து சமாதானம் கூறினார். அப்போது சவுந்தர்யா, குழந்தை இல்லை எனக்கூறி கணவரின் குடும்பத்தினர் தன்னை கொடுமை படுத்துவதாக கூறினார். இதையடுத்து அவர் மீண்டும் கணவர் வீட்டுக்கு சென்றார்.
இந்தநிலையில் கடந்த 17-ந் தேதி சவுந்தர்யா தனது பெற்றோருக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் ஒன்றை அனுப்பினார். அதில் குழந்தை இல்லை என மாமனார் கோவிந்தன், மாமியார் நாகராணி, கணவரின் அண்ணன் முனியப்பன், ஆகியோர் தன்னை கொடுமை படுத்துவதாகவும், ஜாதியை சொல்லி இழிவாக பேசி, மற்றவர்களின் முன்பு அசிங்கப்படுத்துவதாகவும் கூறி இருந்தார்.
தற்கொலை
மேலும் இதனால், தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், அதற்கு கணவரின் குடும்பத்தினரே காரணம் என்றும் தெரிவித்து இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சவுந்தர்யாவின் தந்தை ராஜேந்திரன், அவருடைய செல்போனை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனிடையே வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உதவி கலெக்டர் விசாரணை
இந்த சம்பவம் குறித்து சவுந்தர்யாவின் தந்தை ராஜேந்திரன் மகேந்திரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதில் குழந்தை இல்லை எனக்கூறி கணவர் வீட்டார் கொடுமை படுத்தியதால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து போலீசார் கோபாலகிருஷ்ணன், கோவிந்தன், நாகராணி, முனியப்பன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், திருமணமாகி ஒரு ஆண்டே ஆவதால் தர்மபுரி உதவி கலெக்டர் ஜெயக்குமார் (பொறுப்பு) விசாரணை நடத்தி வருகிறார்.