காரிமங்கலம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


காரிமங்கலம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால், தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 32). தொழிலாளி. இவருக்கும், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த நாகணம்பட்டியை சேர்ந்த திருப்பதி அம்மாள் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு பூவரசன் என்ற மகனும், அக்சயா என்ற மகளும் உள்ளனர்.

தொழிலாளி முனியப்பன், தனது மனைவி ஊரான நாகணம்பட்டியில் குடும்பத்துடன் தங்கி, வேலை பார்த்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவருடைய மனைவி திருப்பதி அம்மாள் கண்டித்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

விஷம் குடித்தார்

இந்தநிலையில் மது குடிப்பதை திருப்பதி அம்மாள் கண்டித்ததால் நேற்று காலை கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வேதனை அடைந்த முனியப்பன் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்தார். வெளியே சென்ற திருப்பதி அம்மாள் வீட்டுக்கு திரும்பியபோது, முனியப்பன் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரிமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, முனியப்பன் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

விசாரணை

இந்த தற்கொலை குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் முனியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story