ஏரியூர் அருகே, ஜாமீனில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி தூக்குப்போட்டு தற்கொலை
ஏரியூர்:
ஏரியூர் அருகே ஜாமீனில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆயுள் தண்டனை
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ஒட்டனூர் சிறுதங்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் மாதேசன் (வயது 73). இவருடைய மனைவி மாதம்மாள். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக மாதேசன், தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட மாதேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
பின்னர் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாதேசன் கடந்த 22-ந் தேதி ஜாமீனில் வெளியில் வந்தார். இதனை தொடர்ந்து சொந்த ஊருக்கு வந்த மாதேசனிடம் அவருடைய 2 மகன்கள் மற்றும் மகள் யாரும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர் நேற்று முன்தினம் அவரது வீட்டின் அருகில் உள்ள வனப்பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏரியூர் போலீசார் மாதேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாமீனில் வெளியில் வந்த ஆயுள் தண்டனை கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.