தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை; மனைவிக்கு தீவிர சிகிச்சை
செம்பட்டி அருகே குடும்ப பிரச்சினையில் தொழிலாளி விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். உடன் விஷத்தை குடித்த மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செம்பட்டி அருகே குடும்ப பிரச்சினையில் தொழிலாளி விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். உடன் விஷத்தை குடித்த மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப பிரச்சினை
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 25). கூலித்தொழிலாளி. இவருக்கு வான்மதி (22) என்ற மனைவியும், தர்ஷன் (2) என்ற மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த 2 பேரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி வீட்டில் வைத்திருந்த எறும்பு மருந்தை (விஷம்) தம்பதியினர் தின்றனர். சிறிது நேரத்தில் ரமேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். வான்மதி வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
எறும்பு மருந்து
இதற்கிடையே ரமேசின் குழந்தை தர்ஷன் அழுதுகொண்டிருந்தது. இந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வான்மதி மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், எறும்பு மருந்தை தின்றதாக தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனையில் வான்மதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கணவர் சாவு
இதற்கிடையே ரமேஷ் நேற்று காலை தனது வீட்டின் பின்புறம் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரமேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்து தம்பதி தற்கொலைக்கு முயன்ற நிலையில், கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.