தர்மபுரி அருகே தந்தை சமைக்க சொன்னதால் கல்லூரி மாணவி தற்கொலை
தர்மபுரி அருகேதந்தை சமைக்க சொன்னதால் கல்லூரி மாணவி தற்கொலைதர்மபுரி:
தர்மபுரி அருகே தந்தை சமையல் செய்ய சொன்னதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கீழ் கொள்ளுப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயி. இவருடைய மகள் கவிப்பிரியா (வயது 17). இவர் பாலக்கோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இதனிடையே கவிப்பிரியாவின் தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் மாரியப்பன் தனது மகள் கவிப்பிரியாவிடம், சமையல் மற்றும் மாடுகளுக்கு புல் அறுத்து போடும்படி கூறினார். மேலும் வீட்டு வேலைகளையும் கவனித்து கொள்ள தெரிவித்துள்ளார். இதனால் கவிப்பிரியா மனவேதனை அடைந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி கவிப்பிரியா வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தண்ணீரில் கலக்கி குடித்தார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் அங்கிருந்து வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவிப்பிரியா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சமைக்க சொன்னதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.