காண்டிராக்டர் உள்பட 3 பேர் தற்கொலை


காண்டிராக்டர் உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 3:25 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் காண்டிராக்டர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் காண்டிராக்டர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் மோரமடுகு அருகே உள்ள சின்ன காவாப்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 46). கூலித்தொழிலாளி. கடன் பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு கொண்டார்.

இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மணி இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கட்டிட காண்டிராக்டர்

ஓசூர் கர்னூர் சாந்தி நிகேதன் நகரை சேர்ந்தவர் நாகேஷ் (47). கட்டிட காண்டிராக்டர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கட்டுமான பொருட்களை வாகனத்தில் ஏற்றியபோது இவரது மீது தளவாட பொருட்கள் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த நாகேஷ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட நாகேஷ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியார் நிறுவன ஊழியர்

தேன்கனிக்கோட்டை தாலுகா தேவர்உளிமங்கலம் பள்ளப்பள்ளியை சேர்ந்தவர் நஞ்சப்பா (40). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து இவர் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் மன வருத்தத்தில் இருந்த நஞ்சப்பா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story