பாலக்கோடு அருகே வேலைக்கு அனுப்பாத விரக்தியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை


பாலக்கோடு அருகே வேலைக்கு அனுப்பாத விரக்தியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:36+05:30)
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே வேலைக்கு அனுப்பாத விரக்தியில் இளம்பெண் விஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டார்.

பட்டதாரி இளம்பெண்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மூங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பச்சியப்பன். விவசாயி. இவருடைய மகள் பரிமளா (வயது 23). இவர் எம்.ஏ. தமிழ் படித்துள்ளார். மேலும் வீட்டில் இருந்து டி.என்.பி.எஸ்.சி. அரசு தேர்வுக்கு படித்துவந்தார்.

இந்தநிலையில் பரிமளாவுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். மேலும் தான் வேலைக்கு செல்ல ஆசைப்படுவதாக தந்தையிடம் கூறினார். ஆனால் பச்சியப்பன் மற்றும் குடும்பத்தினர் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

விஷம் குடித்து தற்கொலை

இதனால் பரிமளா மனவேதனை அடைந்தார். மேலும் குடும்பத்தினர் வேலைக்கு அனுப்பாத விரக்தியில் கடந்த 22-ந் தேதி அவர் வீட்டில் இருந்த விஷத்தை (எலி மருந்து) குடித்து, மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிமளா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் பரிமளா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலக்கோடு அருகே குடும்பத்தினர் வேலைக்கு அனுப்பாத விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.


Next Story