சரியாக படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் கிணற்றில் குதித்து 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை


சரியாக படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் கிணற்றில் குதித்து 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான்.

10-ம் வகுப்பு மாணவன்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு பாலாஜி (வயது 16), திலீப் என்கிற ஜெயகாந்தன் (13) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். பாலாஜி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவர் சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பாலாஜியை சரியாக படிக்கவில்லை என்று கூறி பெற்றோர் கண்டித்தனர். பின்னர் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் இருந்த பாலாஜி திடீரென மாயமானான்.

8 மணி நேர போராட்டம்

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவனை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அங்குள்ள ரைஸ்மில் அருகே விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றின் தடுப்பு சுவரில் பாலாஜி செருப்பு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பாலாஜியை தேடினர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து காலை 10 மணி முதல் 5 மோட்டார்கள் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 8 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கிணற்றில் இருந்து பாலாஜி பிணமாக மீட்கப்பட்டான்.

தற்கொலை

தகவல் அறிந்த பொம்மிடி போலீசார் பாலாஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெற்றோர் கண்டித்ததால் மாணவன் பாலாஜி கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சரியாக படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story