கெலமங்கலம் அருகேபோக்சோ வழக்கில் தேடப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே போக்சோ வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பலாத்காரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள கடூரை சேர்ந்தவர் சக்ரலப்பா (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பூரணம் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் பலாத்காரம் புகாரில் சிக்கிய சக்ரலப்பாவை பொதுமக்கள் தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் அவர் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சக்ரலப்பா கடந்த 8-ந் தேதி மாயமானார். அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காடுஉத்தனப்பள்ளி அருகே சிக்கபந்திரி குட்டை பகுதியில் உள்ள மரத்தில் சக்ரலப்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கெலமங்கலம் போலீசார் சக்ரலப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்சோ வழக்கில் சிக்கிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.