ராயக்கோட்டை அருகே ஓட்டல் உரிமையாளர் தற்கொலை-போலீஸ் விசாரணை
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
ஓட்டல் உரிமையாளர்
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணப்பா (வயது52). இவர் மனைவியை பிரிந்து 11 ஆண்டுகளாக வசித்து வருகிறார். தற்போது ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில் ஓட்டல் நடத்தி வந்தார். அருகில் உள்ள அளேசீபத்தில் ஒரு வீட்டில் தங்கி இருந்தார். அவரது வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.நீண்ட நேரமாக வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், கிராம நிர்வாக அலுவலர் குமரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தற்கொலை
கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு ராமகிருஷ்ணப்பா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
குடும்ப பிரச்சினையால் ராமகிருஷ்ணப்பா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாணை நடந்து வருகிறது.