ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
அயோத்தியாப்பட்டணம் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசில் சிக்கியது.
அயோத்தியாப்பட்டணம்
அயோத்தியாப்பட்டணம் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசில் சிக்கியது.
வாலிபர் தற்கொலை
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பகுதியில் நேற்று காலை ரெயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சேலம் ரெயில்வே போலீசார், காரிப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது பிணமாக கிடந்தவர் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் கவிபாரதி (வயது 24) என்பதும், அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய 4 பக்க கடிதம் போலீசில் சிக்கியது.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடன் தொல்லை
எனது குடும்பத்தினரிடம் எனது உடலை புதைக்கவோ, எரிக்கவோ பணம் இருக்காது. அதனால் அரசாங்கம் எனது இறுதி சடங்கை நடத்த உதவுமாறு கேட்டு கொள்கிறேன். எனது குடும்பம் வறுமையிலும், கடன் தொல்லையிலும் சிக்கி மிக அதிகமாக வருந்தி தவிக்கிறது. நான் எனது கிருஷ்ணரை பார்க்க செல்கிறேன். பெற்றோர், உறவினர்கள் வேதனை பட வேண்டாம். பக்தியால் முக்தி அடைய நினைத்தேன். அதற்கு ரொம்ப நாள் ஆகும் போல் இருக்கிறது. அதனால் தான் இந்த வழியை முடிவு செய்தேன். நான் நாராயணனிடம் போகிறேன். அவரிடம் எல்லாம் உள்ளது.
இவ்வாறு அதில் அவர் உருக்கமாக கூறியிருந்தார்.
மேலும் அந்த கடிதத்தில் 'ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே' என்ற பாடலும் எழுதப்பட்டிருந்தது. ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.