இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
உறவினர் திருமண விழாவுக்கு முன்கூட்டியே அனுப்ப கணவர் மறுத்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்
இளம்பெண்
பாகலூர் அருகே உள்ள பெலத்தூர் ராஜீவ் நகரை சேர்ந்தவர் காந்தராஜ். தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கும், கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பிரசாதிஅள்ளியை சேர்ந்த சவுந்தர்யா (வயது 25) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 3 வயதில் மகன் உள்ளான்.
சவுந்தர்யாவின் உறவினர் ஒருவரின் திருமணம் கடந்த 25-ந் தேதி நடந்தது. இந்த விழாவுக்கு 22-ந் தேதியே செல்ல வேண்டும் என்று சவுந்தர்யா, தனது கணவர் காந்தராஜிடம் கூறி வந்துள்ளார். அதற்கு அவர் சவுந்தர்யாவை முன்கூட்டியே அனுப்ப மறுத்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 20-ந் தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
தற்கொலை
இதில் மனமுடைந்த சவுந்தர்யா வீட்டில், மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். வலியால் அலறிய அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் சவுந்தர்யாவை மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி கடந்த 25-ந் தேதி சவுந்தர்யா பலியானார். இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் தற்கொலை குறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.