பர்கூர், பாகலூர் பகுதிகளில்2 பெண்கள் தற்கொலை
பர்கூர்
பர்கூர் அருகே உள்ள பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி மேல்கொட்டாயை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி தனலட்சுமி (வயது 45). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமியின் தாயார், நிலத்தை அவரது பெயரில் எழுதி தருவதாக கூறியிருந்தார். ஆனால் சொன்னபடி அவர் நிலத்தை எழுதி கொடுக்கவில்லை. இதில் மனமுடைந்த தனலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாகலூர் அருகே உள்ள கொடியாளத்தைச் சேர்ந்தவர் கிரியப்பா. இவரது மனைவி லட்சுமியம்மா (49). கிரியப்பாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த லட்சுமியம்மா, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.