பங்குதாரர்கள் ஏமாற்றியதால், நைட்ரஜன் வாயுவை சுவாசித்து நூற்பாலை அதிபர், தாயுடன் தற்கொலை
நல்லம்பள்ளி:
பங்குதாரர்கள் ஏமாற்றியதால் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து நூற்பாலை அதிபர் , தாயுடன் தற்கொலை செய்தார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நூற்பாலை அதிபர்
தர்மபுரி ஒட்டப்பட்டி பழைய கோட்ரஸ் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 72). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி சாந்தி (56). இவர்களுடைய மகன் விஜய் ஆனந்த் (35). என்ஜினீயரான இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தனது கல்லூரி நண்பர்களான கார்த்திக்(34), அருண்(36) ஆகியோருடன் கூட்டாக சேர்ந்து ஈரோடு மாவட்டம் நசியனூரில் ஒரு நூற்பாலையை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நண்பர்கள் 2 பேருடன் விஜய் ஆனந்துக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தொழிலை பிரித்து தனியாக செய்து வந்தார். அங்கு அவர் வாடகைக்கு வீடு எடுத்து தனது தாயாருடன் தங்கி தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வங்கி தொடர்பான வேலை இருப்பதாக தாய்-மகன் 2 பேரும் தர்மபுரிக்கு வந்தனர்.
எச்சரிக்கை வாசகம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜய் ஆனந்தின் தந்தை பழனிவேல் பாலக்கோடு அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றார். அன்று இரவு அவர் வீட்டுக்கு வந்தபோது வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மற்றொரு சாவியை பயன்படுத்தி வீட்டின் பூட்டை திறந்து அவர் உள்ளே சென்றார்.
அப்போது வீட்டு அறையின் வெளிப்பகுதியில் கதவில், 'விஷத்தன்மை கொண்ட நைட்ரஜன் வாயு உள்ளே உள்ளது. அதனால் தயவு செய்து கதவை உடைப்பதற்கு முன்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும்' என்று எச்சரிக்கை வாசகம் ஒரு அட்டையில் எழுதி ஒட்டப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பழனிவேல் இதுகுறித்து தனது உறவினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
தாய்-மகன் தற்கொலை
இதைத்தொடர்ந்து அங்கு வந்த உறவினர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது விஜய் ஆனந்த் மற்றும் அவருடைய தாயார் சாந்தி ஆகியோர் கழுத்தில் பாலித்தீன் கவர் சுற்றப்பட்ட நிலையில் தரையில் பிணமாக கிடந்தனர். அருகே வைக்கப்பட்டிருந்த 2 நைட்ரஜன் சிலிண்டர் குழாய்கள் அவர்களுடைய மூக்கு மற்றும் வாய் பகுதியுடன் இணைக்கப்பட்டு இருந்தது. தாய்-மகன் 2 பேரும் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து இறந்து இருப்பது தெரியவந்தது.
இதைப் பார்த்து பழனிவேல் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது தாய், மகன் 2 பேரும் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. 2 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடிதம் சிக்கியது
தாய், மகன் இறந்து கிடந்த அறையில் இருந்த மேஜையில் ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் கார்த்திக் மற்றும் அருண் ஆகியோர் ரூ.25 லட்சத்தை ஏமாற்றி விட்டதாகவும், அதன் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், தனது சாவிற்கு கார்த்திக் மற்றும் அருண் ஆகிய 2 பேர்தான் காரணம் என்று விஜய் ஆனந்த் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் அந்த பகுதியில் விஜய் ஆனந்தின் செல்போனும் கண்டெடுக்கப் பட்டது. இது தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினா். கார்த்திக், அருண் ஆகியோருடன் சேர்ந்து நடத்திய தொழிலுக்கு விஜய் ஆனந்த் ரூ.25 லட்சம் முதலீடு செய்ததாகவும், தொழில் நஷ்டம் அடைந்ததால் அந்த முதலீட்டு தொகையை அவர்களிடம் விஜய் ஆனந்த் திருப்பி கேட்டதாகவும், ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி தராமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
2 பேர் கைது
இதேபோல் மேலும் சிலரிடம் கடனாக கொடுத்த பணமும் திருப்பி கிடைக்காததால் மனவேதனை அடைந்த விஜய் ஆனந்த் இது பற்றி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நைட்ரஜன் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக அதியமான் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திக், அருண் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தாய்-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.