கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


நாமக்கல்லில் கடன் பிரச்சினையால் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்

ஜவுளி வியாபாரம்

நாமக்கல் கொண்டிசெட்டிபட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சிவா (வயது 61). இவரது மனைவி ஞானசுந்தரி (58). இந்த தம்பதிக்கு பாலாஜி என்கிற மகனும், மோகனபிரியா என்கிற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.

கணவன்-மனைவி இருவரும், குறிஞ்சி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கொரோனா ஊரடங்கிற்கு முன்பு இவர்கள் நாமக்கல் பஸ்நிலையம் அருகில், துணி கடை நடத்தி வந்தனர். ஊரடங்கு காரணமாக போதிய வியாபாரம் இல்லாததால், அந்த துணி கடையை மூடிவிட்டனர்.

இதனால் பொருளாதார ரீதியாக நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக மொபட்டில் சென்று, துணி விற்பனை செய்து வந்தனர். இந்த வியாபாரத்தில் போதுமான வருமானம் இல்லாததால், அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர்.

கணவன்-மனைவி தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு மேலாகியும், அவர்களின் வீட்டில் கதவு திறக்கப்படவில்லை. எனவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்து உள்ளனர். அப்போது சிவா, அவரது மனைவி ஞானசுந்தரி ஆகிய இருவரும் வெவ்வேறு அறையில், தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

மேலும் போலீசார் நடத்திய சோதனையின்போது அங்குள்ள மேஜையில் கடிதம் ஒன்று எழுதி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதில் மகன், மகள் செல்போன் எண்கள் எழுதப்பட்டு இருந்தன. மேலும் கடிதத்தில் எங்களை மன்னித்து விடுங்கள் என எழுதி இருந்தனர்.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், துணி வியாபாரத்திற்காக கடன் பெற்று இருப்பதும், போதிய வியாபாரம் இல்லாததால், அவதிப்பட்டு வந்ததும் தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடன் பிரச்சினையால் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story