நண்பன் இறந்த துக்கத்தில் பட்டதாரி தற்கொலை
பள்ளிபாளையத்தில் நண்பன் இறந்த துக்கத்தில் பட்டாரி தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவரது தாயாரும் விஷம் குடித்து பரிதாபமாக இறந்தார்.
பள்ளிபாளையம்
பட்டதாரி தற்கொலை
பள்ளிபாளையம் அருகே மொளசி வெள்ளியம்பாளையம் பள்ளக்காடு தோட்டத்தைச் சேர்ந்தவர் நீலவேணி (வயது 56). இவருக்கு ரமேஷ்குமார் (38). சங்கர் (36) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில் சங்கர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சங்ககிரி உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கரின் நண்பர், ரவி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரெயில் விபத்தில் இறந்தார்.
இதனால் துக்கத்தில் இருந்த சங்கர், நண்பன் ரவி போன இடத்திற்கே தானும் போகிறேன் என தாயிடமும், அண்ணனிடமும் கூறிவந்துள்ளார். மனவேதனையில் இருந்த சங்கர் கடந்த 13-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சங்கரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் இறந்தார்.
தாயாரும் விஷம் குடித்தார்
இது குறித்து ரமேஷ்குமார் மொளசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மகன் இறந்த மனவேதனையில் இருந்த நீலவேணி விஷம் குடித்து விட்டதாக உறவினர் ஒருவருக்கு போனில் கூறி உள்ளார். இந்த தகவல் அறிந்த ரமேஷ்குமார் தனது தாயாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நீலவேணி இறந்தார். இந்த சம்பவம் குறித்து ரமேஷ்குமார் மொளசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் 2 தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.