ஓசூர், பாகலூர் பகுதியில் கார் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை
ஓசூர்
ஓசூர், பாகலூர் பகுதியில் கார் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கார் டிரைவர்
சேலம் மாவட்டம் வேப்பிலைப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 58). இவர் ஓசூரில் பாகலூர் சாலை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பகுதியில் தங்கி கால் டாக்சி டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இதை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பழனிசாமி, தமிழ்நாடு ஓட்டல் அருகில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
பாகலூர் தாளர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சச்சின் (23). பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் வேலைக்கு சரியாக செல்லவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர்கேட்டுள்ளனர்.
இதனால் மனமுடைந்த சச்சின் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சச்சின் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.