மது குடித்ததை அக்காள் கண்டித்ததால்பிளஸ்-2 மாணவன் தற்கொலைகிருஷ்ணகிரி அருகே சோகம்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே மது குடித்ததை அக்காள் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
பிளஸ்-2 மாணவன்
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. டேம் அருகே உள்ள மாதகண்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் கோவிந்தசாமி (வயது 17). ராமு மற்றும் அவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டனர். பெற்றோர் இறந்ததால் மாணவன் சூடுதனஅள்ளி கிராமத்தில் உள்ள அக்கா சந்தியாவீடடில் தங்கி கே.ஆர்.பி.டேம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதைகண்ட சந்தியா மற்றும் அவரது கணவர் சின்னசாமி ஆகியோர் பெற்றோர் இறந்து விட்ட நிலையில் படிக்காமல் மது குடித்து விட்டு வருகிறாயே என கண்டித்துள்ளனர். தொடர்ந்து மது குடித்தால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என சந்தியா, தம்பியை மிரட்டி உள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனமுடைந்த மாணவன் கோவிந்தசாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து கே.ஆர்.பி. டேம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது குடித்ததை அக்காள் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவன் தற்ெகாலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.