தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி-போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த ஒருவர் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக ஓடி சென்று அவருடைய தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் எரப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னசாமி (வயது 47) என்பது தெரியவந்தது.
விசாரணை
மேலும் விவசாயியான அவருக்கு சொந்தமான பூர்வீக சொத்தில் 6 ஏக்கர் நிலத்தை உறவினர்கள் சிலர் தங்கள் பெயருக்கு மாற்றி பதிவு செய்ததாகவும், இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடம் புகார் அளித்ததாகவும், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவரிடம் தர்மபுரி டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.