உறவினர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
உறவினர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்,
குறுஞ்செய்தி அனுப்பிய வாலிபர்
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 21). திருமணம் ஆகாத இவர், கொண்டலாம்பட்டியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது உறவினர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினார்.
அதில், தனக்கு மனதில் நிம்மதி இல்லை என்று கூறி அத்துடன் வாழ விருப்பமில்லை என குறிப்பிட்டு இருந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே சுண்ணாம்பு கார தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு கோபாலகிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் உறவினர்கள் கோபாலகிருஷ்ணனை அவசரமாக கொண்டு சென்று கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த தற்ெகாலை குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணன் என்ன காரணத்தினால் இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
மகுடஞ்சாவடி அருகே உள்ள காக்காபாளையம் கனககிரியை சேர்ந்தவர் பாரதி (54), கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை மகுடஞ்சாவடியை அடுத்துள்ள ஆ.தாழையூர் அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் பாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.