வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை; முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது
குடியாத்தம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
தற்கொலை
குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஊராட்சி ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், பீடி சுற்றும் தொழிலாளி. இவரது மகன் ராஜதுரை (வயது 27). இவர் கே.வி.குப்பம் அடுத்த சென்னங்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பஸ் நடத்துனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வீட்டில் ராஜதுரை தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி ராஜதுரையின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கு தூண்டியதாக குடியாத்தம் அடுத்த கீழ் ஆலத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் டி.எஸ்.கஜேந்திரன் (57) என்பவரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தற்கொலை செய்துகொண்ட ராஜதுரைக்கும், அவர் நடத்துனராக பணியாற்றி வந்த பள்ளியில் படித்த ஒரு மாணவிக்கும் பழக்கம் இருந்துள்ளது. தற்போது அந்த மாணவி காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். கடந்த 1-ந் தேதி அந்த மாணவியை, ராஜதுரை தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஆயுதப்படைக்கு மாற்றம்
இதுகுறித்து அவரிடம், கஜேந்திரன் கேட்டுள்ளார். அப்போது ராஜதுரையின் செல்போனை பறித்துக்கொண்டு மிரட்டி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று முன்தினம் மாலை ராஜதுரை, டி.எஸ்.கஜேந்திரன் மற்றும் சிலர் மீது கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பின் வீட்டுக்கு சென்ற ராஜதுரை மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ராஜதுரை நேற்று முன்தினம் மாலை டி.எஸ்.கஜேந்திரன் மற்றும் சிலர் செல்போனை பறித்து சென்றதாகவும், மிரட்டியதாகவும் அளித்த புகார் குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் புகார் குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லாத கே.வி.குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், பெண் போலீஸ் ஏட்டு கீதா ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.