தூக்குப்போட்டு பிளம்பர் தற்கொலை


தூக்குப்போட்டு பிளம்பர் தற்கொலை
x

கறம்பக்குடி அருகே தூக்குப்போட்டு பிளம்பர் தற்கொலை செய்துகொண்டார்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

பிளம்பர் தற்கொலை

கறம்பக்குடி அருகே உள்ள நரங்கியப்பட்டு வைரவன் தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன் என்கிற சத்யராஜ் (வயது 36) எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பர் வேலை செய்து வந்தார். இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சத்யராஜ் அவரது வீட்டிற்கு அருகே உள்ள பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமான தோப்பில் உள்ள மரத்தில் கைலியால் தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதை கண்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சத்யராஜுன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது அங்கு திரண்ட உறவினர்கள் சத்யராஜை கறம்பக்குடியை சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் தாக்கியதாகவும் அதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகவும், எனவே சத்யராஜை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யும் வரை அவரது உடலை எடுக்கவிடமாட்டோம் என கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

4 பேரை பிடித்து விசாரணை

இதையடுத்து புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா, ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் ஆகியோர் சத்யராஜின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதைதொடர்ந்து கறம்பக்குடி போலீசார் சத்யராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story