தற்கொலை வழக்கில் திருப்பம்: பெண் என்ஜினீயர் அடித்துக்கொலை கணவர் கைது


தற்கொலை வழக்கில் திருப்பம்: பெண் என்ஜினீயர் அடித்துக்கொலை கணவர் கைது
x

சேலத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட பெண் என்ஜினீயரை அடித்துக்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம்,

சேலம் சூரமங்கலம் முல்லை நகரை சேர்ந்தவர் தனுஸ்ரீ (வயது 26). என்ஜினீயரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கீர்த்திராஜ் (31) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கீர்த்திராஜ் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் கணவன், மனைவி இருவரும் சேலம் ரெட்டிப்பட்டி பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு ஏற்பட்ட தகராறில் கீர்த்திராஜ், தனது மனைவியின் காதில் பலமாக தாக்கினார். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தனுஸ்ரீ தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

தூக்கில் பிணம்

இதனிடையே நேற்று முன்தினம் மாலை கீர்த்திராஜ் தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதன்பிறகு இரவு கீர்த்திராஜின் தந்தை பெரியசாமி, தனுஸ்ரீயின் பெற்றோருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவர் தூக்கில் தொங்குவதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அந்த அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் தனுஸ்ரீ தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். முதலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

போலீசார் விசாரணை

இதனையடுத்து தனுஸ்ரீயின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியதால் அவரது கணவர் கீர்த்திராஜ், மாமனார் பெரியசாமி, மாமியார் ரஞ்சனி ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் தனுஸ்ரீயை அடித்துக்கொலை செய்துவிட்டதாகவும், இதனால் அவரது கணவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் நேற்று காலை உறவினர்கள் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தனர். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி விசாரணை மேற்கொண்டார்.

கணவர் கைது

இதனிடையே, பிரேத பரிசோதனை செய்தபோது, தனுஸ்ரீயின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்ததால் அவரை அடித்துக்கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் முதலில் தற்கொலை என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தற்போது கொலை வழக்காக மாற்றி சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து கணவர் கீர்த்திராஜை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கிரிக்கெட் மட்டையால் மனைவியை அடித்துக்கொன்றது தெரியவந்தது.


Next Story